ரன்னிங் பயிற்சியில் நீங்கள் செய்யும் தவறுகள்

ரன்னிங் பயிற்சியில் தீவிர வலியுடன் ஓடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அந்த வலி, நம் உடலில் ஏதேனும் சில காயத்தினால் ஏற்பட்ட அறிகுறியின் வலியாக இருக்கலாம். ரன்னிங் பயிற்சி செய்வதற்கு, ஷூவின் உழைப்பு, தரம், போன்றவற்றை பார்த்து வாங்குவதுடன், பாதங்கள் வைக்கும் இடத்தில் கூடுதல் பேட் இருக்கும் ஷூக்களாக வாங்க வேண்டும்.

முன் பக்கமாக குனியும் போது, முதுகு வலி பிரச்சனைகள் ஏற்படும். எனவே அதனை தடுக்க ஓடும் போது, உடலை நேர் நிலையில் வைத்து ஓடுவது மிகவும் அவசியமாகும். வார்ம் அப் எதுவும் செய்யாமல் நேரடியாக ஓடத் துவங்குவது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் அதனால் தசைவலி, மூட்டு பிடிப்பு போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

ஓட்டப் பயிற்சியை தொடங்கும் முன் முதலில் காலின் நடு பாதத்தை ஊன்ற வேண்டும். இதனால் உங்களின் ஆற்றல், திறன் அதிகமாக பயன்படுத்துவது குறையும். ஓட்டப் பயிற்சியை மேற்கொள்ளும் போது, கைகளை அதிகமாக ஆட்டுவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. அதனால் கைகளில் உள்ள ஆற்றல் திறன் குறைவதை தடுக்க முடியும்.

தினமும் ஜாக்கிங், ஓட்டப்பயிற்சி போன்ற எந்த பயிற்சியை செய்ய தொடங்கினாலும், நம்மால் முடியும் அளவிற்கு மிதமான அளவில் ஈடுபட வேண்டும். இதனால் நம் உடலின் வலிமையை பாதுகாக்கலாம்.

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கும் ஸ்கிப்பிங் பயிற்சி

பெண்கள் தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, தொப்பை பிரச்சினையும் படிப்படியாக குறையும்.

இன்று தொப்பை பிரச்சினையால் அவதிக்குள்ளாகும் ஆண்கள், பெண்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, தொப்பை பிரச்சினையும் படிப்படியாக குறையும்.

* முதலில் உடலில் உள்ள தேவையற்ற எடை குறைகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும், உடலுக்குப் புத்துணர்வையும் தரக் கூடியது ஸ்கிப்பிங்.

* உடலின் உள் உறுப்புகளும், நரம்புகளும் தக்க பயிற்சி கிடைப்பதால் அவற்றின் செயல்பாடுகள் சீராகின்றன. மனக் கவலை, மன அழுத்தம், எதிலும் நாட்டமின்மை போன்ற உள்ளக் கோளாறுகள் நீங்குகின்றன.

* உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், இதயத்திற்கும், நுரையீரலுக்கும் வலுவூட்டம் கொடுக்கிறது.

* கை, கால், தொடைப் பகுதி தசைகள் அதிக சக்தி பெறுகின்றன. மூட்டு வலி, கணுக்கால் வலி நீங்குகிறது. தொடர்ச்சியான இடுப்பு வலி உள்ளவர்களுக்கு அது குறைவதுடன், முதுகெலும்பின் எலும்பு முடிச்சுகள் பலம் பெறுகின்றன. இரத்த ஓட்டம் சீராகிறது.

* நல்ல மன ஒருமைப்பாட்டையும், தன்னம்பிக்கையையும் தருகிறது. ஆரோக்கியம் மற்றும் அழகை பராமரிக்க ஸ்கிப்பிங் உதவுகிறது. மிக முக்கியமாக ஆழ்ந்த உறக்கத்திற்கு ஸ்கிப்பிங் அருமருந்தாகும். அதனால் நீங்களும் உடலுக்கும் ஸ்கிப்பிங்தானே என எண்ணாமல் ஆரோக்கியமான வாழ்விற்கு ஸ்கிப்பிங் செய்து பயன்பெறுவோம்.

விரைவில் உடல் எடையை குறைக்கும் 3 உடற்பயிற்சிகள்

கடமைக்கு ஜாகிங், நடைப்பயிற்சி என்று செல்லாமல், ஆர்வத்தோடு இந்தப் பயிற்சிகளைச் செய்துவந்தால், ஆரோக்கியம் நம் வசமாகும். நம் உடலையும் மனதையும் ஒருங்கே தயார்ப்படுத்தும் காலை நேரப் பயிற்சிகளை பார்க்கலாம்.

ஜம்ப் அண்ட் ஸ்குவாட் (Jump and Squat)

தரையில் நேராக நின்று, இரு கைகளையும் கோத்து மார்புக்கு முன்பாக வைக்க வேண்டும். இப்போது, பாதி அமர்ந்த நிலையில் உடலை பேலன்ஸ் செய்தபடி இருக்க வேண்டும். பிறகு, அப்படியே மேல் நோக்கிக் குதித்து, மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதேபோல், 15 முறை செய்ய வேண்டும்.

பலன்கள்:

சீரான இதயத் துடிப்புக்கு உதவுகிறது. உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து, உடல் எடையைக் குறைக்கிறது. காலின் வடிவமைப்பை மேம்படுத்துகிறது.

லஞ்சஸ் (lunges exercise)

தரையில் நேராக நிற்க வேண்டும். பின், இரண்டு கால்களையும் முன் பின்னாக நன்கு விரித்து வைக்க வேண்டும். இப்போது, வலது காலை சற்று முன் நோக்கி மடக்கி, இடது காலால் முட்டியிட்ட நிலையில் இருக்க வேண்டும். சில விநாடிகள் கழித்து, படிப் படியாக மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதேபோன்று, இடது காலை மடக்கி, வலது காலை முட்டி போட்ட நிலையிலும் செய்ய வேண்டும். இது ஒரு செட். இப்படி 15 முறை செய்ய வேண்டும்

பலன்கள்:

உடலுக்கு அதிகமாக உள்ள கலோரியின் அளவைக் குறைக்கிறது. கால் மற்றும் முட்டியின் வலு அதிகரிக்கும். கால்களில் உள்ள தசைப்பகுதி வலுவடையும்.

ஏரோ பாக்ஸிங் (Aero Boxing)

இடது காலை முன்புறம் வைத்து நேராக நிற்க வேண்டும். கைகளில் டம்பிள்ஸை எடுத்து, கழுத்துப் பகுதியின் அருகே பிடிக்க வேண்டும். ஒரு குத்துச்சண்டை வீரர் போட்டிக்கு தயாராக நிற்பது போன்ற நிலை இது. இப்போது, இடது கையை தோள்பட்டையோடு சேர்த்து வைத்துக்கொண்டு வலது கையை எதிரே ஒருவர் நிற்பது போல கற்பனை செய்துகொண்டு, அவரை நோக்கி நீட்ட வேண்டும். பிறகு, வலது கையை தோள்பட்டைக்கு அருகே கொண்டு வந்து, இடது கையை வலதுபுறம் முன்னே நீட்ட வேண்டும். இது ஒரு செட். பிறகு, வலது காலை முன்புறமாக அகட்டி வைத்துக்கொண்டு செய்ய வேண்டும். இப்படி, தலா 15 முறை செய்ய வேண்டும்.

பலன்கள்:

கைகளில் உள்ள தசை உறுதியாகிறது. தோள்பட்டை உறுதியாகும். முழு உடலுக்கு அசைவு ஏற்படுவதால், உடலின் நிலைத்தன்மை மேம்படும்.

மார்புத் தசைகள் வலுவடையச்செய்யும் உடற்பயிற்சி

விரிப்பில் குப்புறப் படுக்க வேண்டும். பிறகு, கைகளை நிலத்தில் ஊன்றி முழு உடலும் கால் விரல் மற்றும் கைகளால் தாங்கும்படி உயர்த்த வேண்டும். இப்போது, இடது கையில் டம்பிள்ஸை எடுத்து, தலையை உயர்த்தி நேராகப் பார்த்தபடி, இடது கையை மடக்க வேண்டும்.

இப்படி 15 முறை கைகளை மடக்கி நீட்டிய பின், டம்பிள்ஸை வைத்துவிட்டு, குப்புறப் படுத்துப் பழையநிலைக்குத் திரும்ப வேண்டும். மீண்டும் உடலை உயர்த்தி, வலது கையால் டம்பிள்ஸைப் பிடித்தபடி 15 முறை கைகளை மடக்கி நீட்ட வேண்டும். படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம்.

டம்பிள்ஸ் இல்லாதவர்கள் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் நிரம்பி டம்பிள்ஸ் போல் பயன்படுத்தலாம்.

பலன்கள்:

உடல் முழுவதும் புவி ஈர்ப்பு விசை செயல்படுவதால், தேவையற்ற சதை குறையும்.

தோள்பட்டை மற்றும் முழங்கைக்கு இடையே உள்ள சதைப்பகுதி வலுவடையும்.

வயிறு, மார்புப் பகுதியில் ரத்த ஓட்டம் மேம்படும். கொழுப்புக் கரையும். மார்புத் தசைகள் வலுவடையும்.

உடற்பயிற்சி விஷயத்தில் தெரிந்து கொள்ள வேண்டியவை

ஆரோக்கிய வாழ்க்கைக்கு டாக்டர்கள் முதல் அனைவரும் வலியுறுத்தும் விஷயம், உடற்பயிற்சி. இதனால் உடல் வலிமை பெறும், மூளை மற்றும் இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும்.

ஆனால் உடற்பயிற்சி விஷயத்திலும் நாம் சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். எந்த வயதினர் எப்படிப்பட்ட உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்று அறிவீர்களா?

அதைப் பற்றிப் பார்ப்போம்…

குழந்தைகளுக்கு ஓடியாடி விளையாடுவது, நீச்சலடிப்பது, யோகாசனம், நடைப்பயிற்சி போன்ற பயிற்சிகளை கற்றுக்கொடுக்கலாம். மேலும் அவர்களை கைப்பந்து, கால்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளை விளையாடுவதற்கு ஊக்கப்படுத்தலாம்.

பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட வளரிளம் பருவத்தினர் உடற்பயிற்சிக்கூடத்துக்குச் செல்லலாம். தினமும் அரை மணி நேரம் மெல்லோட்டப் பயிற்சியில் (ஜாகிங்) ஈடுபடலாம். ஆனால் உடலை வருத்தும் ‘சிக்ஸ் பேக்’ முயற்சியைத் தவிர்க்கலாம்.

நடுத்தர வயதினர் ஸ்ட்ரெச்சிங், வாக்கிங், ஜாகிங், குறைவான எடையில் பளு தூக்குதல், நீச்சல் போன்ற உடற்பயிற்சிகளைச் செய்யலாம். ஆனால் கடினமான பயிற்சிகளைச் செய்யக் கூடாது. ஏனெனில் இதனால் கடுமையான தசைவலி, தசைப்பிடிப்பு ஏற்படும்.

சர்க்கரை நோயாளிகள், கட்டாயம் உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும். தினமும் 40 நிமிடங்கள் நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம். இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்து, இன்சுலின் தரம் மேம்படும். ஆனால் உடற்பயிற்சி செய்யும் போது சரியான ஷூக்களை அணிய வேண்டும்.

ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள், தினமும் சீரான வேகத்தில் நடைப்பயிற்சி செய்யலாம். இதனால் இதயத்துடிப்பு சீராகும். இதயத் தசைகள் வலிமை பெறும்.

ஆனால் பளு தூக்கும், தலையை அசைக்கும் பயிற்சி, ‘டிக்லைன் பெஞ்ச் பிரஸ்’, ‘டிக்லைன் டிரைசெப்ஸ்’ போன்ற பயிற்சிகளை செய்யக் கூடாது.

இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடற்பயிற்சி செய்வதற்கு முன் டாக்டரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

ஏனெனில், நோயின் தன்மையைப் பொறுத்துத்தான் அவர்கள் எந்த மாதிரியான உடற்பயிற்சியை மேற்கொள்வது என்று பரிந்துரைக்கப் படும்.

மாரடைப்புக்கு உள்ளானவர்கள் கடினமான உடற்பயிற்சிகளை செய்யக் கூடாது. துரிதமான ரத்த ஓட்டம் அபாயத்தை ஏற்படுத்தலாம். அவர்கள், கை, கால்களை வேகமாக வீசி நடக்காமல், மிதமான நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம்.

பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், சாதாரண நடைப் பயிற்சியைச் செய்யலாம். ஆனால் வேகமான நடைப்பயிற்சியையோ, பளு தூக்கும் பயிற்சியையோ செய்யக் கூடாது.

முதியவர்கள் மிகக் குறைந்த எடையில் பளு தூக்கும் பயிற்சியைச் செய்யலாம். எவ்வித உடல்நலக் குறைவும் இல்லையென்றால், வேகமான நடைப்பயிற்சி, மெல்லோட்டத்தில் கூட ஈடுபடலாம். ஆனால் மூச்சு வாங்கும் அளவுக்கு எந்த உடற்பயிற்சியையும் செய்யக் கூடாது.

உடற்பயிற்சி நல்லது, அவசியமானது. ஆனால் அது அவரவர் வயதுக்கு ஏற்ற மாதிரி அமைய வேண்டும்.

ஜாலியான சந்தோஷமான உடற்பயிற்சி ஏரோபிக்ஸ்

‘‘ஏரோபிக்ஸ் (Aerobics) எக்சர்சைஸ் செய்வதால் எலும்பு, தசைகள் வலுவடைவதைப் போலவே இதயம், நுரையீரலும் வலுவாகும். உடலின் கெட்ட கொழுப்பு கரையும்; டைப் 2 நீரிழிவும் கட்டுக்குள் வரும். தொடர்ந்து ஏரோபிக்ஸ் செய்வதன் மூலம் உடலில் உள்ள அதிகப்படியான சதையை விரைவில் கரைக்கலாம்.

தோல் சுருக்கமடைவதை தடுப்பதால் வயதான தோற்றத்திலிருந்தும் விடுபடலாம்.

இருந்த இடத்திலேயே Jogging excercise செய்வதால் கால்கள் நன்கு வலுவடைகின்றன. கைகள் இரண்டையும் தலைக்கு மேலே தூக்கி செய்யும் Hand excercise கைகளில் உள்ள தளர்வடைந்த தசைகளை இறுக்கமடையச் செய்யும்.

குழந்தை பிறப்புக்குப் பிறகு இளம் தாய்மார்களுக்கு இடுப்பு மடிப்புகளில் சதை போட்டு விடும். இவர்கள் கைகள் இரண்டையும் இடுப்பில் வைத்துக் கொண்டு இரண்டு புறமும் பக்க வாட்டில் திரும்பி வேகமாக இடுப்புக்கான பயிற்சியை செய்தால் ஸ்லிம் இடுப்பழகு கிடைத்து விடும்.

வலது கையால் இடது காலையும், இடதுகையால் வலது காலையும் மாற்றி, மாற்றி டான்ஸ் ஆடுவது போல வேகமாக செய்தால் அடிவயிற்று பகுதியில் இருக்கும் சதை குறையும்.

தற்போது அதிக நேரம் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு மணிக்கட்டு, தோள் பட்டைகளில் வலி ஏற்படுகிறது.

மேலும், இருசக்கர வாகனங்களில் நெடுந் தொலைவு பயணம் செய்பவர்களுக்கும் இடுப்பு, தோள்பட்டை வலி வருகிறது.

இதற்கெல்லாம் தனியாக பயிற்சிகள் இருக்கிறது. வீடியோக்களையும் பார்த்து செய்வதை விட பயிற்சியாளர்களிடம் முறையாகக் கற்றுக் கொண்டு செய்யவேண்டும் என்பது முக்கியம்.

ஏனெனில், ஒவ்வொருவரின் உடல் செயல்பாடும் (Metabolism) வேறு வேறு. அதற்குத் தகுந்தவாறு பயிற்சியாளர் கற்றுக் கொடுப்பார் என்பதே அதற்கு காரணம்.

‘இவற்றுடன் ஏரோபிக்ஸில் முக்கியமான ஒரு ப்ளஸ்…. வழக்கமான உடற் பயிற்சிகளை மேற்கொள்ளும் போது சலிப்பு ஏற்பட்டு விடும் வாய்ப்பு உண்டு. அதனாலேயே தொடர முடியாமல் கொஞ்ச காலத்தில் விட்டு விடுவோம்.

ஆனால், ஏரோபிக்ஸ் பயிற்சிகள் கற்றுக் கொள்வதற்கும், பயிற்சி செய்வதற்கும் சந்தோஷமாகவும், ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் இருக்கும் என்பதால் தொடர்ந்து மிஸ் பண்ணவே மாட்டோம். ஏரோபிக்ஸில் இது முக்கியமான விஷயம்’’.

உடற்பயிற்சியை ஊக்கப்படுத்தும் சில எளிய நடைமுறைகள்

ஆரோக்கியம் என்னும் சொத்து எப்போதும் நம்முடன் இருக்க வேண்டும் என்றால், மிதமான உணவோடு உடற்பயிற்சியும் அவசியம். பொதுவாக குடும்பத்தில் ஒருவர் மட்டும் தனியாக நடைப்பயிற்சி செல்வதோ, மாடியில் உடற்பயிற்சி செய்வதோ உற்சாகத்தை அளிக்காது.

எனவே, குடும்ப உறுப்பினர்களையும் உடற்பயிற்சி செய்ய ஊக்குவித்தால், நடைப்பயிற்சி கூட உற்சாகமாக இருக்கும். நடந்து செல்ல முடியாத தொலைவில் உள்ள இடங்களுக்குச் செல்லும் போது சைக்கிளில் செல்வது சிறந்த உடற்பயிற்சியாக அமையும். அலுவலகங்களில் உள்ள லிப்ட்டுகளைப் பயன்படுத்தாமல், ஒரு வேளையாவது படிகட்டுகளைப் பயன்படுத்தினால் வயிற்றில் விழும் அதிகப்படியான சதைப்பிடிப்பைக் குறைக்கலாம்.

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று நினைக்காமல் உங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைக்கவும் உடற்பயிற்சி உதவும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதிக உடல் எடை உடையவர்கள், உங்களது எடையில் எவ்வளவை குறைக்க விரும்புகிறீர்கள் என்பதை குறித்து வைத்துக் கொண்டு அதை நோக்கி உங்கள் உடற்பயிற்சியை முறைப்படுத்துங்கள்.

தொடர்ந்து 30 நிமிட நடைப்பயிற்சிதான் முழுமையான நடைப்பயிற்சியாக இருக்கும். அதற்குக் குறைவான நடைப்பயிற்சியால் உடலுக்கு எந்த பயனும் ஏற்படாது. உடற்பயிற்சி என்று தனியாக செய்ய விரும்பாதவர்கள், சைக்கிளிங், விளையாட்டு, நடனம் என்று தங்களை வேறு வகைகளில் ஈடுபடுத்திக் கொள்ளலாம். நோய் இல்லா மனிதனாக இருக்க வேண்டும் என்றால் எப்போதும் உற்சாகமாக உடற்பயிற்சியை செய்யுங்கள்.

தொடர்ச்சியான உடற்பயிற்சியால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

மனநிலையை ஊக்குவிக்கும் உணவு முறையை நம்புவதற்கு பதிலாக உடற்பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. ஏனெனில் உடற்பயிற்சி மூளையில் உற்பத்தியாகும் ரசாயனங்களுக்கு அதிகப்படியான தூண்டு தலை கொடுப்பதால் மனநிலையை சந்தோஷமாகவும் அமைதியாகவும் வைத்திருக்கும்.

தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்தால் தசைகளின் வலிமை கூடும். ஆற்றல் அதிகரிக்கும். மேலும் திசுக்களுக்கு தேவையான அளவு ஆக்சிஜன் கிடைக்க உதவிபுரியும். உடற்பயிற்சி செய்தால் கடுமையான வேலைக்கு பின் தூக்கம் வருவது போல தூக்கம் வரும். ஆனால் தூங்குவதற்கு முன் கண்டிபாக உடற்பயிற்சி செய்யக்கூடாது.

தினசரி உடற்பயிற்சி செய்வது எலும்புகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கும். இதனால் ஆஸ்டியோ போரோசிஸ் மற்றும் ஆர்தரிடிஸ் போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம். உடற்பயிற்சி குடல் புற்று நோய், மார்பக புற்று நோய் மற்றும் நுரையீரல் புற்று நோய் போன்ற பல வகையான புற்று நோய்கள் வருவதை குறைக்க உதவி புரிகிறது.

அதனால் உடற்பயிற்சி செய்து புற்று நோய் வரும் அபாயத்தில் இருந்து பாதுகாத்து கொள்ளுங்கள். நீண்ட ஆயுள் தினசரி உடற்பயிற்சி செய்வதால் ஆயுள் பல வருடம் கூடும். ஆயுளை கூட்டுவதோடு மட்டுமல்லாமல் வயதானாலும் ஆரோக்கியமான வாழ்வை வாழலாம்.

முதுகு வலியால் அவஸ்தைப்படுபவர்கள் வலியை குறைக்க உடலை சிறிது வளைத்து உடற்பயிற்சி செய்யலாம். முதுகு வலியை மருந்துகள் மூலம் குணப்படுத்துவதை விட உடற்பயிற்சி மூலம் குறைப்பதே சிறந்த வழி. படிப்பாற்றல் அதிகரிக்கும் தினசரி உடற்பயிற்சி செய்தால் மூளையின் ரசாயன அளவு அதிகரிக்கும்.

இது புதிய மூளை அணுக்களை உருவாக்கி மூளையில் உள்ள அணுக்களின் மத்தியில் இணைப்பை உருவாக்கும். அதனால் புதிய விஷயங்களை படிக்கவும், புரியவும் உதவும். டென்னிஸ், கூடைப்பந்து போன்ற கடின பயிற்சியையும் மேற்கொண்டால் படிப்புத்திறன் மற்றும் மன ஒருமித்தல் திறன் அதிகரிக்கும்.

நலம் தரும் கூழாங்கல் நடைபயிற்சி

அதன் காரணமாகவே கை தட்டுவதைக்கூட அழுத்தமாகத் தட்ட வேண்டும் என்று சொல்வோம். செருப்பு இல்லாமல் வெறும் காலில் நடக்கும்போது, கால்களில் இருக்கும் புள்ளிகள் தூண்டப்பட்டு உடலுக்கும் மனதுக்கும் நன்மை கிடக்கிறது. கூழாங்கல் உருண்டையாக, வழவழப்பாக இருப்பதால் உள்ளங்கையிலும், உள்ளங்காலிலும் பட்டதும், ஒரு இடத்தில்கூட நிற்காமல், அனைத்துப் பகுதிகளையும் தொட்டுக்கொண்டு உருண்டோடிவிடும்.

இதனால் கைகளுக்கும் கால்களுக்கும் அழுத்தம் சமமாகக் கிடைக்கிறது. வழுவழுப்பாக இருப்பதால் பாதத்தைப் பாதிக்காது. கூழாங்கல்லில் நடப்பது உடலுக்குப் பயிற்சி மட்டும் அல்ல, ஆரோக்கியத்தையும் தருகிறது. காலில் உள்ள நரம்புப் புள்ளிகள் மூலம் சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல், முதுகெலும்பு, கண், காது உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும் தூண்டப்படுகின்றன.

இதனால் அந்த உறுப்பின் செயல்பாடும் சீராகி உடல் ஆரோக்கியம் பெறும். கூழாங்கல் மூலம் பெறப்படும் அழுத்தத்தைப் போன்றதுதான், கைகளால் உள்ளங்காலுக்கு அழுத்தம் தரப்படும், ஃ புட் ரெப்லக்சாலஜி. (Foot Reflexology) கூழாங்கல் பாதையில் நடக்கும்போது, செருப்பு இல்லாமல் வெறும் காலோடு நடக்க வேண்டும்.

முதன்முதலில் நடக்கும்போது சற்று கடினமானதாக இருந்தாலும், பின்னர் பழகிவிடும். முதலில் மெதுவாக நடக்க வேண்டும். ஒரு வாரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகரிக்க வேண்டும். கூழாங்கல் பாதையில் ஒரு நாளைக்கு 15 முதல் 20 நிமிடங்கள் வரை நடந்தால் போதும்.

ஆர்வத்துடன் உடற்பயிற்சி செய்தால் பலன் நிச்சயம்

உடற்பயிற்சிக்குள் நுழையும் முன் உடலை உடற்பயிற்சிக்கு ஏற்பத் தயார்படுத்த வேண்டியது மிகவும் முக்கியம். கைகள், கால்கள், கழுத்து, எலும்பு மூட்டுகள், தோள்பட்டை என உடலின் ஒவ்வொரு பாகத்தையும் வார்ம் அப் மற்றும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் செய்து தயார்படுத்திய பிறகே, உடற்பயிற்சியில் இறங்க வேண்டும். இது, தசைப்பிடிப்பு, எலும்பு மூட்டுப் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து உடலைக் காத்து உடற்பயிற்சி செய்வதற்கான ஆர்வத்தை மேம்படுத்துகிறது.

சிக்ஸ் பேக் வைக்க வேண்டும். கட்டுமஸ்தான உடல் வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள்கூட தங்கள் கால்களைக் கவனிப்பது இல்லை. ஓடுவது, சைக்கிளிங் செய்வது, ஜாகிங் போவது போன்ற உடற்பயிற்சிகள் கால்களை முழுமையான வலுவாக்காது. எனவே, கால்களை வலுவாக்க, செய்ய வேண்டிய பிரத்யேகப் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். கால்கள் வலுவாகும்போது முழு உடலையும் தாங்கும் திறன் மேம்படுவதால், மேல் உடல் வலுவாவது எளிதாகிறது.

உடற்பயிற்சி என்பது அன்றாடம் செய்ய வேண்டியது. அது ஒரு வேலை என்பதைவிட அது ஒரு வாழ்க்கைமுறை என்ற புரிதல் அவசியம். உடற்பயிற்சியைச் சில நாட்கள் செய்ததும் மனம் அதைவிட்டுவிட ஏதாவது காரணங்கள் தேடும். சளிப்பிடித்திருக்கிறது, மழை பெய்கிறது, வானிலை மோசம், வேலை நேரத்தில் உடல் சோர்வாகிறது, உடல் வலிக்கிறது, நேர மேலாண்மை பாதிக்கப்படுகிறது எனக் காரணங்களை உருவாக்கி உடற்பயிற்சி செய்வதை நிறுத்தத் தூண்டும்.

உடற்பயிற்சியைக் கைவிடுபவர்களில் பெரும்பாலானோர் இந்த தொடக்கநிலை தடுமாற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள்தான். எனவே, விழிப்பாய், பிடிவாதமாய் இருங்கள். எந்தக் காரணத்துக்காகவும் உடற்பயிற்சியைத் தவிர்க்காதீர்கள். ஓரிரு நாட்கள் தவறினாலும் மறுநாள் உடற்பயிற்சிக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிரமாக இருங்கள்.

உடற்பயிற்சி என்பது உடலை வருத்துவது(கஷ்டப்படுத்துவது) அல்ல. உங்களுக்கு மகிழ்ச்சியூட்டும், ஆர்வத்தைத் தூண்டும் பயிற்சிகளை முதலில் செய்யத் தொடங்குங்கள். அதற்காக உடல் சோர்ந்துபோகும்படி வெகுநேரம் அந்தப் பயிற்சியையே செய்துகொண்டு இருக்காதீர்கள்.

எந்தப் பயிற்சி செய்தாலும் அதை நேசித்துச் செய்வதும், உடலும் மனமும் முழு ஈடுபாட்டில் இருப்பதும் முக்கியம். வருத்திக்கொண்டு பயிற்சி செய்யும்போது, உடல் சோர்வடைவதால் உற்சாகமும் விரைவில் குறைந்துபோய் உடற்பயிற்சியையே கைவிட நேரிடும்.