வொர்க்அவுட் நிறுத்தினால்… என்ன நடக்கும்?

தொடர் உடற்பயிற்சி உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வையும் ஆற்றலையும் அளிக்கிறது. உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம், இயக்கம், ஸ்டாமினாவுக்கு பெரிதும் உதவுகிறது. தொடர்ந்து உடற்பயிற்சி செய்யும்போது அது, உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் தேவையான ஆக்சிஜன், வைட்டமின், தாதுஉப்புக்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களை சரியான அளவில் கிடைக்கச் செய்கிறது. அனைத்துக்கும் மேலாக, ஃபிட்டான தோற்றத்தை அளிக்கிறது. உற்சாகத்துடன் உடற்பயிற்சி செய்பவர்களால், அதை நிறுத்த முடியாது. ஒருவேளை நிறுத்தினால் என்ன ஆகும்?

தசை தளர்ச்சி

இரண்டு வாரங்களில், தசைகள் அதன் பொலிவை இழக்கும். வயிறு மற்றும் தொடைப் பகுதிகளில் தசைகள் தளர்வடையும். இது உடலில் சோம்பலை அதிகரிக்கும். நோய் எதிர்ப்புச் சக்தி குறைய ஆரம்பிக்கும். மனஅழுத்தத்துக்கான வாய்ப்பு அதிகரிக்கும்.

வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பு

உடற்பயிற்சி செய்துவிட்டு அதிகமாகச் சாப்பிடும்போது, உடலில் சதை போடாது. காரணம், உடற்பயிற்சியின் போது அதிக அளவில் கலோரி எரிக்கப்பட்டுவிடும். கூடுதல் கலோரிகள் இருந்தாலும், உடற்பயிற்சி செய்வதால் சுரக்கும் எண்டார்பின் (Endorphin) என்னும் ரசாயனம், வளர்சிதை மாற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி, தேவையற்ற கொழுப்புகளை தசையில் படியவிடாமல் தடுக்கும். அதே நேரம், உடற்பயிற்சியை முற்றிலுமாகத் தவிர்க்கும்போது, எண்டார்பின் ஹார்மோன் சுரக்காமல், வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்தி, கொழுப்புகளைச் சேர்த்துவிடும். வயிறு மற்றும் தொடைப் பகுதியில் அதிகமாக கொழுப்பு படியும்.

கல்லீரல், இதயம் பாதிப்பு

திடீரென உடற்பயிற்சியை நிறுத்துவதால், உடலில் சேரும் கெட்ட கொழுப்பை கல்லீரலால் எளிதில் கட்டுப்படுத்த முடியாது. இதனால் கல்லீரல் மற்றும் இதயம் பாதிக்கப்படும். மேலும், சர்க்கரை நோயாளிகளுக்கு அளிக்கப்படும் மருந்துகள் கல்லீரல் வழியாகத்தான் வேலை செய்யத் தொடங்குகின்றன. அதனால், அவர்களுக்கு சர்க்கரைநோயின் பாதிப்பு அதிகரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

ஃபிட் உடல் பெறுவது எப்படி?

நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பதற்கு பதில், ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை 10 நிமிடம் எழுந்து, அங்கும் இங்கும் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இதனால், உடலில் எல்லா தசைகளுக்கும் ரத்தம் சீராகப் பாயும்.  அனைத்து உறுப்புகளும் புத்துணர்ச்சியோடு இயங்கும்.

சூரிய ஒளியிலிருந்து வரும் ஊதாக் கதிர்களால் உடலுக்கு வைட்டமின் டி கிடைப்பதால், காலையில் ஜாக்கிங், வாக்கிங் செய்வது நல்லது.

முறையாக யோகா கற்றுக் கொண்ட பின், வீட்டிலே செய்யலாம்.

டென்னிஸ், வாலிபால் என ஏதாவது ஒரு விளையாட்டைத் தேர்வு செய்து தீவிரமாக விளையாடலாம். மனமும் உடலும் புத்துணர்வு பெறும்.

ஜிம்முக்கு செல்ல முடியாதவர்கள், வீட்டிலேயே சிட்-அப்ஸ், புஷ் அப்ஸ், ஸ்ட்ரெச் பயிற்சிகளை செய்யலாம்.

 

வயிறு – தொப்பை அளவு!

தொப்பை இருந்தாலே ஆரோக்கியம் குறைந்தவர் எனலாம். அதிலும் நாம் மோசமான நிலையில் இருக்கிறோம் என்பதை ‘இன்ச் டேப்’ மூலம் தெரிந்து கொள்ளலாம்.

வயிறு மற்றும் இடுப்புப் பகுதியின் சுற்றளவை `வெயிஸ்ட் – ஹிப்’ (Waist – Hip) விகிதாசாரம் என்பார்கள். இதன் மதிப்பு ஒன்றுக்கு கீழ் இருந்தால், எந்த பிரச்னையும் இல்லை. ஒன்றுக்கு மேல் இருப்பவர்களுக்கு தொப்பை இருக்கிறது. இதனால், உடலில் இதயம், கல்லீரல் போன்ற முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படலாம்.

உதாரணமாக, வயிற்றின் சுற்றளவு 85 செ.மீ ஆகவும், இடுப்புச் சுற்றளவு 95 செ.மீ ஆகவும் இருந்தால், 85/95 = 0.89. விகிதாசார மதிப்பீட்டின்படி, இது ஒன்றுக்குக் குறைவாக இருக்கிறது. ஆக, உடலில் பிரச்னைகள் குறைவு எனக் கருதலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *